நாயகி –ஸ்டில்ஸ்
வீரபாண்டிய கட்டபொம்மன் விமர்சனம்
மே 5, 1959இல் வெளியான இப்படம் ஆகஸ்ட் 21, 2015இல் டிஜிட்டலில் ரீஸ்டோர் செய்யப்பட்டு மீண்டும் திரைக்கு வந்துள்ளது. சிவாஜியின் வீர கர்ஜனையை பெரிய திரையில் காணும் வாய்ப்பை மீண்டும் நல்கியுள்ளனர் சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு.
கப்பம் கட்ட மறுத்ததோடு, கொள்ளையில் ஈடுபட்ட தனது அமைச்சரையும் ஒப்படைக்க மறுத்து வெள்ளையரின் கோபத்துக்கு ஆளாகிறார் வீரபாண்டிய கட்டபொம்மன். போர் மூள்கிறது.
வெள்ளையருக்கு எதிராகப் போராடிய முதல் வீரன் கட்டபொம்மன் என்ற வாய்ஸ் ஓவரோடு படம் தொடங்குகிறது. இந்த வரலாற்றுத் திரிபைக் கணக்கில் எடுக்காமல், படத்தின் கதையை சக்தி கிருஷ்ணமூர்த்தியின் ஒரு புதினமாகப் பாவித்தால் படம் மகத்தான காவியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் டிஜிட்டலில் வெளியிடப்பட்ட கர்ணன், ஆயிரத்தின் ஒருவன் போல் இப்படம் தொடக்கம் முதல் கடைசி வரை ஈர்க்கவில்லை. காரணம், படம் ஒற்றை கருவை நோக்கமாகக் கொண்டு பயணிக்காததே! எப்பொழுதெல்லாம் சிவாஜி வெள்ளையருக்கு எதிராக கர்ஜிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் திரையரங்கம் அல்லோலகல்லோலப்படுகிறது.
பத்மினி, ஜெமினி கணேசன் காதல் அருமையாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ஜி.ராமநாதனின் இசையில், ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ என பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல் இன்றளவும் ரசிக்க வைக்கிறது. எகிப்தின், கெய்ரோவில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில், சிறப்பான இசையமைப்பிற்கான பரிசை இப்படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்ஸன் துரையாக பார்த்திபனும், பானர் மேனாக ஜாவர் சீத்தாராமனும் அருமையாக நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். எட்டப்பராக நடித்திருக்கும் வி.கே.ராமசாமி கச்சிதமாகப் பொருந்துகிறார். ராஜஸ்தான் கோட்டைகளை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையாகக் காட்டி, படத்தின் ரிச்னஸையும் கலரையும் அதிகப்பபடுத்தியுள்ளார் இயக்குநர் பி.ஆர்.பந்தலு.
வண்ண ஜிகினா விமர்சனம்
கருப்பாய் இருக்கிறோமென்ற தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கும் பாவாடை, தனக்கொரு துணையைத் தேடிக் கொள்ள ஃபேஸ்புக்கில் போலியான அடையாளங்களுடன் கிஷோர் குமார் என்ற பெயரில் ஃப்ரொஃபைல் ஒன்றைத் தொடங்குகிறான். அவனது எண்ணம் ஈடேறி அவனுக்கொரு காதலி கிடைத்தாளா இல்லையா என்பதுதான் வண்ண ஜிகினாவின் கதை.
கால் டாக்ஸி ட்ரைவர் பாவாடையாக விஜய் வசந்த். கதையின் நாயகனாக கச்சிதமாகப் பொருந்துகிறார். ஏஞ்சல் பிரியாவாக சானியா தாரா. காரணமேயின்றிச் சிரித்துக் கொண்டேயிருக்கிறார். வில்லனே தேவைப்படாத கதையில், கொதிக்கும் கொப்பறையில் தள்ளியது போன்ற ரியாக்ஷனுடன் படம் நெடுகே பொருந்தாமல் வருகிறார் ஆன்சன் பால்.
படம் எதைப் பற்றிப் பேச விழைகிறதோ, அதற்கு எதிர் திசையில் சென்று முடிகிறது. ஆனால் சுபமாய் முடிவது ஆறுதலான விஷயம். ‘கருப்பாக உள்ளவர்கள், சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர்’ என்பதுதான் படம் சொல்ல வரும் நீதி. ஆனால், க்ளைமேக்ஸில் படம், ‘உன் குறையோடு ஏத்துக்கிறதுதான் உண்மையான லவ்’ என்று படம் முடிகிறது. கருப்பாய் இருப்பது ஒரு குறையா?
படத்தின் முக்கியமானதொரு கதாபாத்திரமாக ஃபேஸ்புக் வருகிறது. காதலர் கிடைக்க, ஃபேஸ்புக்கில் அக்கெளண்ட் தொடங்கி விட்டாலே போதும் என்பதுபோல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஏஞ்சல் பிரியாவின் புகைப்படத்தை உபயோகித்து, ஃபேஸ்புக்கில் கருகமணி யாரையோ காதலிக்கும் விஷயம் தெரிய வந்தவுடன், ஏஞ்சல் பிரியா பதற்றமடையாமல் உள்ளார். என்ன கொடுமை சார் இது?
தொடர் பாடல்கள் படத்தோடு ஒட்ட விடாமல் இம்சிக்கிறது. மலை முகடில் நின்று பாவாடையும், கருகமணியும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் காட்சிகள் கலகலப்பாக உள்ளது. கருகமணியாக ஸ்ரீதேவி நடித்துள்ளார். தற்கொலை செய்து கொள்ள வந்துவிட்டு, அவ்ர் செய்யும் அழிச்சாட்டியங்கள் ரசிக்க வைக்கின்றன. இன்னொரு ஆறுதலான விஷயம், இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான படத்தின் நீளம்.
வேலா வளர்த்த தீ
எழுத்தாளர் ஒருவர் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு ஒரு நாவலை எழுதினால், அதைப் படிப்பவன் கதி அதோகதிதான் போல!
குற்றப் பரம்பரை நாவல் படிப்பவரின் அகம், புறம் இரண்டையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி விடுகிறது. கதைசொல்லியான வேல ராமமூர்த்தி, நாவல் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே உங்களை கெதியாய்த் தயார்படுத்தி, தான் கொண்டு செல்ல விரும்பும் இடத்திற்குக் கொண்டு போய்விடுகிறார். வழியில் நிற்பதென்ற பேச்சுக்கே இடமில்லை. அவரை மறுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாதளவுக்கு மிக நேர்த்தியாய் ஒரு வாழ்க்கைக்குள் உங்களைத் தூக்கிப் போட்டு விடுகிறார். இது சரியா தவறா என நிதானித்து யோசிக்க விடாமல் கடைசி பக்கம் வரை ஒரே மூச்சில் ஓட விடுகிறார். இருட்டுக்குள் ஓடும் அத்தகைய ஓட்டம்தான் அவர் வெளிச்சமிட்டுக் காட்டும் வாழ்க்கை முறை. அவ்வாழ்க்கையில் கரணம் தப்பினால் மரணம். அப்படி நேரும் சிறு பிசகால்தான் கொம்பூதியைச் சேர்ந்த சோலை என்பவனின் குரல்வளை அறுந்து, அவன் கொடூரமாக இறக்க நேருகிறது.
நாவலின் பெயரே கதையின் களத்தைக் கோடிட்டுக் காட்டிவிடும். மதயானையையொத்த மனிதர்கள் நடமாடும் களமது. கள்ளர் கிராமமான கொம்பூதியின் தலைவர் பெயர் வேயன்னா. அவரது கண்ணசைப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களிடம் சிக்கி, பெருநாழியில் கச்சேரி (போலிஸ் ஸ்டேஷன்) நடத்தும் வெள்ளையர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சம் அன்று. நாவலைப் படிக்கும் பொழுது, வேல ராமமூர்த்தியைத்தான் வேயன்னாவாக உருவகித்துக் கொள்ள முடிகிறது. அதற்குக் காரணம் பின்னட்டையிலுள்ள வேல ராமமூர்த்தியின் கம்பீரமான புகைப்படமோ அல்லது ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் அவரை வீரத்தேவராகப் பார்த்ததோ காரணமாக இருக்கலாம். ஆனால், உண்மையான வேயன்னாவோ வேல ராமமூர்த்தியின் தந்தை ஆவர். வேயன்னா பிரஸிடெண்ட்டாக இருந்த பெருநாழியிலுள்ள குடிநீர் கிணற்றை அனைத்துச் சாதியினரும் உபயோகிக்க வழிவகை செய்துள்ளார். அதைப் பொறுக்காதவர்கள், கிணற்றில் மலத்தை அள்ளிப் போட்டுள்ளனர். நாவலில் வரும் வேயன்னாவின் தீரத்தையும் தாண்டி, நிஜ வேயன்னா சற்றும் சளைக்காமல் மூன்று நாட்களுக்குள் கிணற்றை முழுவதும் தூர் வாரி மீண்டும் உபயோத்துக்குக் கொண்டுள்ளார். இந்த நாவலை வேல ராமமூர்த்தி தன் தந்தை வேயன்னாவுக்குக் காணிக்கையாக்கியது அவ்வளவு பொருத்தமானதொரு முடிவு.
1957 இல் நடந்த முதுகளத்தூர் கலவரத்துக்கு முன், ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருந்த இரண்டு பூர்வீகக் குடிகளுக்கிடையே நிலவிய அன்பையும் அன்னியோனியத்தையும் காத்திரமான படைப்பாக்கியுள்ளார் வேல ராமமூர்த்தி. இந்நாவல் ‘கூட்டாஞ்சோறு (2007)’ எனும் தொடராக ஜூனியர் விகடனில் வந்த பொழுது, இரு சாதிக்குள்ளும் சம்பந்தம் செய்வதாக முடித்திருப்பார் போலும். அதை ‘பூர்வீக ரத்த தடயங்கள்’ எனும் எஸ்.ஏ.பெருமாளின் முன்னுரையில் இருந்து அறிய முடிகிறது. ஆனால், நாவலில் அன்னமயிலையும் வேயத்துரையையும் சேர்க்காமல் பிரித்து விடுகிறார். அது மட்டுமின்றி 2014இல் எழுதப்பட்ட புது என்னுரையில், மற்ற சாதிக்காரர்கள் மட்டும் ‘தலித்’துடன் சம்பந்தம் செய்யத் தாவியா குதிக்கிறார்கள் எனக் கேள்வியும் எழுப்புகிறார். இதைப் பற்றி கவிஞர் ராஜ சுந்தரராஜன் எழுதுகையில், ‘தொடராக எழுதிய காலத்தில் அப்படியொரு கற்பனாவாதம் இருந்ததாகவும் இப்போது திருத்தப்பட்டதாகவும் தெரிந்துகொண்டேன்’ என்று பதிந்துள்ளார். மாற்றத்தை முன்னெடுக்க கற்பனாவாதம் ஒரு தொடக்கமாக இருந்திருக்கலாம் என்ற மனக்குறை எழுவதைத் தடுக்க முடியவில்லை.
நாவலின் தகதகப்பில் இருந்து இடையிடையே நம்மைக் காப்பது ஒரு மானும், அதை வளர்க்கும் வஜ்ராயினியுமே! மையக் கதையிலிருந்து விலகும் இந்த கிளைக் கதை மாய எதார்த்த வகையைச் சார்ந்தது. அந்தக் கதையில் வரும் பேராசை மாந்திரீகரான நாகமுனி மிகவும் பொல்லாதவன். எந்த அளவு மூர்க்கமானவன் எனில், திருநங்கையான ஹஸார் தினாரைத் தன்னைப் போலவே கதைசொல்லியையும் நாவல் முழுவதும் அவன், இவன் என்றே விளிக்க வைத்துவிடுகிறான். இல்லையெனில் அவள், இவள், அவர் என்றழைத்து ஹஸார் தினாருக்கு வேல ராமமூர்த்தி கண்டிப்பாக மதிப்பளித்திருப்பார் என்றே தோன்றுகிறது. சில சமயம் எழுத்தாளரை அவரது கதாபாத்திரங்களே தம் வசம் பண்ணி விடுகின்றன என்பது உண்மைதான் போலும்.
நாவலின் வில்லன் போல் சித்தரிக்கப்படும் ஊர் ‘பெருநாழி’. வேல ராமமூர்த்தியின் சொந்த ஊரின் பெயரும் அதுவே! 1974இல் அவரின் முதல் கதை செம்மலரில் பிரசுரமாகியுள்ளது. பெருநாழியில் பெண் எடுத்த திண்டுக்கல் முஸ்லிமொருவர், நம்ம மாமனார் ஊர் பற்றிய கதையெனக் கொண்டுவந்து பெருநாழியில் கொடுத்துள்ளார். அதைப் படித்த பெருநாழிக்காரர்கள், எழுதினவன் ஊருக்குள் வந்ததும் அவனைக் கொன்றுவிட்டு, ஊர் பொதுவில் வழக்கைப் பார்த்துக் கொள்ளலாம் என தீர்மானம் போட்டுள்ளார்கள். 40 வருடங்களாகத் தொடர்ந்து தன் எழுத்தின் மூலம் சுய சாதி விமர்சனத்தை”யும்” செய்து வருகிறார். ‘தாட்சண்யமின்றி சாட்டை சுழற்றியவன் என்பதே என் எழுத்தின் பலம்’ என்கிறார் வேல ராமமூர்த்தி. சாதி நெருப்பை மூட்டி, அதில் குளிர் காய நினைப்பவர்கள்தான் அவர் சாட்டையின் இலக்கு. 2007 இல் மீண்டும் பெருநாழியை உரண்டைக்கு இழுக்கிறார். ஆனால் ஊரின் மீதும், தம் மக்கள் (இரு சாதியினர்) மீதும் பெரும் பாசம் கொண்டவர் வேல ராமமூர்த்தி. அதனால்தான் உப கதையாக, பெருநாழியின் வரலாறையும் பெயர் காரணத்தையும் நாவலுக்குள் கொண்டு வந்துவிடுகிறார்.
தொடர் கதை எழுதுவதிலுள்ள சிக்கல், எங்கேனும் தொடர்புகள் அறுபட்டுவிடும். குண்டடிபட்டு சம்பங்கி ஆற்றங்கரையில் ஒதுங்கும் வேயன்னாவுக்கு, இருபது வருடங்கள் கழிந்த பின் வெள்ளைக்காரனின் துப்பாக்கி எனும் ஆயுதம் எப்படி இயங்குமென்பது தெரியவில்லை. இந்த நாவல் முடிக்கும்பொழுது இரண்டு முரணான உணர்ச்சிகள் ஒரு சேர எழுந்தன. ஒன்று மகிழ்ச்சி; இன்னொன்று வருத்தம். தீண்டாமையை அனுஷ்டிக்கும் பெருநாழியில் நல்லவேளையாக பிறக்கவில்லை. ஆகையால் வேயன்னாவின் வளரிக்கு இலக்காகாமல் தப்பினோமே என்ற மகிழ்ச்சியும், கொம்பூதியில் பிறந்து வேயன்னாவின் தலைமையில் எருதுகட்டுக்குப் போக முடியலையே என்ற வருத்தமும்தான் அது.
- தினேஷ் ராம்
பி.கு.: டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள இந்நாவலின் முன்னட்டை ஓவியத்தை வரைந்தது எவரென்ற விவரம் புத்தகத்துக்குள் இல்லை. அட்டை வடிவமைப்பு மிக அருமையாய் உள்ளது.
பிற்சேர்க்கை: கவிஞர் ராஜ சுந்தரராஜனின் மறுமொழி:
//இதைப் பற்றி கவிஞர் ராஜ சுந்தரராஜன் எழுதுகையில், ‘தொடராக எழுதிய காலத்தில் அப்படியொரு கற்பனாவாதம் இருந்ததாகவும் இப்போது திருத்தப்பட்டதாகவும் தெரிந்துகொண்டேன்’ என்று பதிந்துள்ளார். மாற்றத்தை முன்னெடுக்க கற்பனாவாதம் ஒரு தொடக்கமாக இருந்திருக்கலாம் என்ற மனக்குறை எழுவதைத் தடுக்க முடியவில்லை.//
அது அப்படி இல்லை. மறத்தி ஓரொருத்தியையும் அக்கா, தங்கச்சி, ஆத்தாவாகப் பார்க்கிறவர்களாகவே பள்ளர்கள் இருந்தார்கள். ஆகவே அது சாத்தியமில்லை. காமராஜர் காலத்துக்குப் பிறகு வன்மம், பகை எனக் கண்ணிருண்டதே அல்லாமல், முறைதவறி ஒன்றும் நடந்ததில்லை என்றே நம்புகிறேன். (காமராஜருக்குப் பிறகு, அ.தி.மு.க. அந்த ஜாதிப் புகைச்சலை வளர்ப்பது கேடுகெட்ட ‘வோட்டு’ அரசியல்.)
பாபநாசம் சிவன்
பாபநாசம் சிவன் சினிமாவுக்கு எழுதிக் கொண்டிருந்த கவிஞர் என்கிற வகையில் அறியப்படக்கூடாது. அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவை சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே இவரையும் ஒரு இலக்கியவாதி வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. அவைகள் யாவும் கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்திருந்ததால் சினிமா இசையமைப்பாளர்களுக்கு எவ்வித சிரமும் இருந்ததில்லை. ‘தாராபுரம் தாம்பரம் உன் தலையில் கனகாம்பரம்’ என்பது போன்ற கவித்துவம் நிறைந்த பாடல்களெல்லாம் இவருக்கு எழுத வராது.
தஞ்சை மாவட்டம் போலகம் எனும் ஊரில் 1890இல் பிறந்த இவரது இயற்பெயர் ராமய்யா. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். இவரது இளமைக் காலம் திருவனந்தபுரத்தில் கழிந்திருக்கிறது. ஏழை பிரமாணர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக அக்காலத்தில் திருவிதாங்கூர் மகாராஜாவின் ஏற்பாட்டில் பல ஊர்களில் இலவச அன்னதானம் நடைபெறும். இந்த ஏற்பாட்டின்படி தினமும் ஏழை பிராமணர்கள் இலவசமாகச் சாப்பிட முடியும். அப்படி அன்னதானம் அளிக்கப்படும் இடங்களுக்கு ஊட்டுப்புரை என்கிற பெயர் உண்டு. இங்கு தான் ராமய்யாவுக்கு சாப்பாடு. எனவே திருவனந்தபுரம் சென்றதில் சாப்பாடு கவலையில்லாமல் கழிந்தது.
திருவனந்தபுரத்தில் கரமனை என்கிற பகுதியில் வசித்து வந்தார். அங்கிருந்த பஜனை கோஷ்டி ஒன்றில் பாடி வந்தார். பாலக்காடு அருகே நூருணி என்கிற ஒரு ஊர். இந்த ஊரைச் சேர்ந்த பாகவதர் ஒருவரின் நட்பு இங்கே கிடைத்தது. அது இவரது இசை ஞானத்தை வளர்க்க உதவியாக இருந்தது.
இந்நேரம் தாயாரும் காலமாகி விடுகிறார். எனவே, தனது தமையன் பணிபுரிந்து வந்த தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்து சேரவேண்டியதாயிற்று. இங்கிருக்கும் போதுதான் திருமணமாயிற்று.
1939 ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். வீணை எஸ் பாலச்சந்தரின் தகப்பனார் சுந்தரம் அய்யரின் நட்பு கிடைத்தது. சுந்தரம் அய்யரின் மூத்தமகன் எஸ் ராஜம் (ஓவியர்) எஸ் பாலச்சந்தர், மகள் எஸ் ஜெயலட்சுமி மற்றும் சுந்தரம் அய்யர் ஆகியோர் நடித்த ‘சீதா கல்யாணம்’ என்கிற திரைப்படத்திற்கு தன் முதல் பாடல் இயற்றினார் பாபநாசம் சிவன். ஆண்டு 1934.
மைலாப்பூரில் வாசம். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் பஜனை கோஷ்டியில் பிரதானப் பாடகர். மாட வீதியைச் சுற்றி வரும் இந்த பஜனை கோஷ்டி. கற்பகாம்பாள் பேரில் பல பாடல்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.
பாபநாசம் சிவன் தனது குருவாக பிரபல சங்கீத வித்வான் கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யரையே கருதி வந்திருப்பதாக ஒரு பேட்டியில் அவரது மகள் திருமதி ருக்மணி ரமணி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிவனின் சகோதரர் ராஜகோபாலய்யரின் புதல்வி மறைந்த எம்ஜியாரின் துணைவியார் வி.என். ஜானகி என்கிற பதிவுகள் உள்ளன.
1934ல் சினிமாவுக்குப் பாடல் எழுத ஆரம்பித்த பாபநாசம் சிவன் 1950 வரையிலும் தீவிரமாக இயங்கியிருக்கிறார். எம் கே தியாராஜ பாகவதர், பி யூ சின்னப்பா, ஹொன்னப்ப பாகவதர், டி ஆர் மகாலிங்கம் போன்றோரின் பல படங்களுக்கு பாடல்கள் இயற்றி அவைகள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. 1936ல் வெளிவந்த எம் கே தியாகராஜபாகவதர் நடித்த ‘சத்திய சீலன்’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இவரது கீர்த்தனைகள் பலவும் புத்தக உருவில் வெளிவந்திருக்கிறது. சிந்து பைரவி ராகத்தில் இவர் இயற்றி, ஆலத்தூர் சகோதர்களால் பாடப்பட்டு, இசைத்தட்டாக வெளிவந்த பாடல் ‘சந்திரசேகரா ஈசா’. இப்பாடல் இன்றும் கூட பல மேடைகளில் கர்நாடக இசை வித்வான்களால் பாடப்படுகிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை.
மிகவும் சிறப்பான சில திரைப்படப்பாடல்களை இப்போது நினைவு கூரலாம்.
உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ - அசோக்குமார்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் – அசோக்குமார்
மன்மத லீலையை வென்றார் உண்டோ – ஹரிதாஸ்
அன்னையும் தந்தையும் தானே – ஹரிதாஸ்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி – சிந்தாமணி
மனமே கணமும் மறவாதே – சாவித்திரி
வதனமே சந்திரபிம்பமோ - சிவகவி
மறைவாய் புதைத்த ஓடு – திருநீலகண்டர்
இவற்றைப்போல் இன்னும் எண்ணற்ற பாடல்கள் – இப்பாடல்களெல்லாம் அக்காலத்தில் தமிழகத்தில் ஒலிக்காத இடமே கிடையாது. ஏறத்தாழ 100 படங்களுக்கு மேல் பாடல்கள் இயற்றியிருக்கிறார்.
இவைகள் தவிர தமிழின் முக்கியமான சில படங்களில் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. 1939இல் சேவாசதனம். 1943இல் குபேரகுசேலா. இதில் குசேலராக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியம் ‘தியாகபூமி’. இப்படத்தில் நடித்த பாபநாசம் சிவன் அவர்களைத் திரையுலகம் மறக்க இயலாது.
1961 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்தது. காமகோடி பீடம் இவருக்கு ‘சிவபுண்ணியகானமணி’ என்கிற பட்டத்தை வழங்கியது. தமிழ் சினிமா உள்ள காலம் முழுவதம் பாபநாசம் சிவனின் பெருமை திரையுலகில் நிரந்தரமாக இருந்து வரும்.
பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம் பெற்ற சில முக்கியமான படங்கள்:
அசோக்குமார் – 1941
சாவித்திரி – 1941
மதனகாமராஜன் – 1941
நந்தனார் – 1942
சிவகவி – 1943
ஜகதலப்பிரதாபன் – 1944
மீரா – 1945
வால்மீகி – 1946
குண்டலகேசி – 1947
அபிமன்யு – 1948
ஞானசௌந்தரி – 1948
சக்ரதாரி – 1948
தேவமனோகரி – 1949
ரத்னகுமார் – 1949
அம்பிகாபதி – 1957
புதுவாழ்வு – 1957
செஞ்சுலட்சுமி – 1958
நடித்த படங்கள்:
1936 – பக்த குசேலா
1939 – தியாகபூமி
1938 – சேவாசதனம்
1943 – குபேரகுசேலா
- கிருஷ்ணன் வெங்கடாசலம்
கலை உத்தியஸ்தர்
“எம்பெருமானே! இதென்ன மகாபாரதத்திற்கு வந்த சோதனை?”
பல நூறாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுதுதான் லஷ்மியின் முகத்தில் இருந்து பார்வையை மீட்டு வலது பக்கமாகப் புரண்டு படுக்கிறார். உடனே வியாசன், பரந்தாமன் முகத்தினைப் பார்த்து தனது வியாகூலத்தை வெளியிடுகிறார்.
“ஏன் வியாஸரே!? மகாபாரதத்துக்கு என்ன நேர்ந்தது?”
“யாரோ ஜெமோ-வாம். தினம் ஒரு அத்தியாயமென பத்தாண்டுகளுக்கு மகாபாரதம் எழுதுகிறாராமே!?”
“யாரோ ஜெமோவா? என்னச் சொல்கிறீர் வியாஸரே! முக்காலமும் உணர்ந்த நீரா இப்படி அலட்சியமாகப் பேசுவது?”
சற்று தயங்கிய வியாசர், “ஏன் பிரபோ? ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?” என பவ்யமாகக் கேட்டார்.
“தவறு செய்தால் பரவாயில்லையே! மாபெரும் குற்றமல்லவா இழைத்துவிட்டீர்?”
“ஆ.. அப்படி என்ன செய்துவிட்டேன்?”
“கதை சொல்லியான நீர்.. கலைக்காக வாழும் பேராசான் ஜெமோவைப் பற்றி அறியாதது பெருங்குற்றத்தில்தானே வரும்?”
‘பேராசானா?’ என யோசித்த வியாசர், “தாங்களே அவரது பெருமைகளை எடுத்து இயம்பினால் தன்யன் ஆவேன்” என்கிறார்.
“ஜெமோ என்பது அவரது பெயரின் சுருக்கம். பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பில் இருந்து தோன்றிய கண்ணைக் கூசச் செய்யும் பெரும் ஒளிக் கோளமொன்று காலத்தின் பெருவெளியில் மிதந்து கொண்டிருந்தது. சில லட்சம் கோடி வருடங்களுக்குப்பின், பால் வீதியும் சூரிய குடும்பமும் என் கருணையால் தோன்றியது. அதன் விளைவாக பூமியும் உமிழப்பட்டது. பூமி பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்குப்பின் பனியால் உறைந்தது. மிதந்து கொண்டிருந்த நெருப்புக் கோளம் பூமியில் தஞ்சமடைந்தது. அதுதான் ஞானத்தின் மாவித்து. கனன்று கொண்டிருந்த அதிலிருந்துதான், வேதங்களும் உபநிஷதங்களும் தோன்றியது. சத்ய யுகத்தின் தொடக்கத்தில் அந்த ஞானம் மானுட உரு பெற்றது. சின் முத்திரையுடன் மோனத்தில் ஆழ்ந்திருந்த அந்த உருவத்திற்கு “ஜெகதல மோனன்” என பெயர் சூட்டினார்கள் நான்முகனின் நான்கு புதல்வர்களான சனாகதி முனிவர்கள்.
அந்தப் பெயருக்கு, “பூலோகத்தின் மெளனம்” எனப் பொருள். மெளனத்திலிருந்தே ஞானம் பிறக்கிறது. பரத கண்டத்தின் தொன்மையான ஞான மரபுக்கு வித்திட்டதே அவர்தான். இன்று கலி யுகத்தில் மகாபாரதத்தை மீட்டுருவாக்கம் செய்யும் திவ்ய பணியில் ஈடுபட்டுள்ளார்” என்றார் நாராயணன்.
“நான் எழுதிய மகாபாரதத்தை அவர் ஏன் மீட்டுருவாக்கம் செய்யணும்? எனது 18 புராணங்களை விடவும் புகழ் பெற்றதல்லவா நான் எழுதிய இந்த இதிகாசம்? நான் ஸ்தூல வடிவத்தை இழந்துவிட்டாலும், நான் படைத்த படைப்புகள் இன்னும் அழியாமல்தானே இருக்கிறது?”
“எத்தனை ‘நான்’ உன் கேள்விகளில்!!! உமது ஒரு லட்சம் ஸ்லோகங்களும், உபயோகத்தில் இல்லாத சமஸ்கிருதத்தில் உள்ளது. ஜெமோவோ, மக்கள் பயன்பெறும் வழியில் மிக மிக எளிமையான (!?) உரைநடையில் அனைவருக்குமே புரியும்படி” என அடக்கமுடியாமல் சிரித்து விட்டு, “எழுதி வருகிறார்” என்றார் எம்பெருமான்.
“வேறென்ன எழுதியுள்ளார்?”
“வியாஸா! அகந்தையில் பேசுகிறாயா? துவாபுர யுகத்து எழுத்தாளனான உனக்கு கலி யுகத்து எழுத்தாளன் பற்றி என்னத் தெரியும்? எத்தனை சிரமங்களுக்கு மத்தியில் அவர் அயராது இயங்குகிறார் தெரியுமா? உனக்கு கமெண்ட் பாக்ஸ் என்றால் என்னவென்று தெரியுமா? அல்லது ராம்ஜி யாஹூவையாவது தெரியுமா? உன் கற்பனைக்கு எட்டாதது அவர் சிரமமும் உழைப்பும். அவரது நாராயணபுரம் என்ற நாவலை நீ படித்து முடிக்கவே உனக்கு 18 யுகங்கள் ஆகும். உத்திகளைப் பயன்படுத்தி, ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி அவரெழுதிய ‘ஐராவதம்’ என்ற புனைவு அவருக்கு பெரும்புகழை ஈட்டித் தந்துள்ளதை அறிவாயா?”
“நானும்தான் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி எழுதியுள்ளேன். கெளரவர்களால் ஒடுக்கப்பட்டவர்கள்தானே பாண்டவர்கள்?”
“முனி புங்கவ! விதுரருக்கு வாரிசுகள் இருந்து அவர்களை பாண்டவர்களும் கெளரவர்களும் இணைந்து எதிர்த்திருந்தால் அது ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய புனைவு எனச் சொல்ல முடியும். ஆனால், நீ எழுதியது வெறும் பங்காளி சண்டைதானே!”
“வெள்ளை யானையான ஐராவதத்தின் கதை யாது பிரபோ?”
“செயற்கைப் பஞ்சத்தால், தலித் மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கின்றனரே என ஆங்கிலேயரிடம் பணிபுரியும் கேப்டன் ஏய்டன் பைர்னின் ஐரீஷ் மனசாட்சி அவரை உறுத்துகிறது. அந்த உறுத்தல்தான் கதை.”
“இந்தக் கதையில் அவர் பயன்படுத்தியுள்ள உத்திகள் என்ன?”
“ஜெமோ துர்கைபுரத்துக்காரர். கதையோ செட்டியார் பட்டினத்தில் நடக்கிறது. அந்தப் பட்டணத்தின் பேச்சு வழக்கு கை கூட சுமார் பத்து வருஷம் காத்திருந்தார். கடைசியில் கேப்டன் பைர்னின் ஆங்கில மனசாட்சியாக நாவலை நீட்டிவிட்டார். விஜய்காந்த் படத்து தீவிரவாதிகள் தமிழ் பேசுவது போல், நாவலில் அனைவரும் ஆங்கிலம்தான் பேசுகின்றனர்.”
“நல்லாயிருக்கே இந்த உத்தி!! ஆனால் பேராசானுக்கே ஒரு வட்டாரத்தின் பேச்சு வழக்கு கை கூடலைன்னு நினைக்கும் பொழுதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.”
“வியாசரே! உமக்கு ஏன் ஜெமோ மீது இவ்ளோ பொறாமை? அது 143 வருஷத்து முந்தைய கதை. மக்களுக்கு எளிமையாகப் புரிய வேண்டுமென அந்தப் பேச்சு வழக்கை கதையில் பயன்படுத்தவில்லை.”
“பின் ஏன் 10 வருஷம் காத்திருந்தார்?”
“அது தவமய்யா?”
“எதற்கு அந்த தவம்?”
“எழுத்திற்கான தவம்; கலைக்கான தவம்” என்றார் நாராயணன்.
“சரி, வேறென்ன உத்திகள் கதைகளில் பயன்படுத்தி உள்ளார்?”
“குடிக்கார கேப்டன் ஏய்டன் பைர்ன் தவிர கதையில் வரும் அனைவருமே ஞானவான்கள்.”
“அப்படியா? அதெப்படி சாத்தியம்?”
“தர்மருக்கு அனைவரும் நல்லவர்களாகத் தெரிந்தது போலவும், துரியோதனனுக்கு அனைவரும் கெட்டவர்களாகத் தெரிந்தது போலவும்.. ஜெமோவின் கதாபாத்திரங்கள் அனைவருமே அனைத்தும் தெரிந்தவர்கள். செயற்கைப் பஞ்சத்தை அழிக்கும் வழி பற்றியும், மேல்சாதி பெண்களின் அடிமை வாழ்க்கை பற்றியும், ஆங்கிலேயரின் லஞ்சம் எப்படிலாம் செயல்படுகிறது என்பதையும் சாமான்ய இந்திய மக்கள் கேப்டன் ஏய்டன் பைர்னுக்கு ஜெமோவின் சார்பாகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். நீர் மகாபாரதத்தில் வியாசனாக வருகிறீர். ஜெமோ நேரடியாக வராவிட்டாலும் விஷய ஞானமாக அனைவருள் இருந்தும் ஊற்றாய் சுரந்து கொண்டேயிருக்கிறார்.”
“அப்போ கேப்டனுக்கு ஒன்றுமே தெரியாதா?”
“ஏன் தெரியாது? தனது கோச் வண்டியின் வரலாறையும், அது எப்படி உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் அறிவார். ஷெல்லியின் கவிதையும், விஸ்கியில் திளைத்திருப்பது எப்படியென்றும் அறிவார் அவர். பட்டினியால் இறக்கும் மக்களைக் கண்டு குபீரெனப் பரிதாபப்படவும் தெரிந்து வைத்திருக்கிறார்.”
கொஞ்சம் யோசித்து விட்டு, “வெண்முரசில் வேத வியாஸானாகிய நான் வருகிறேனா அல்லது பேராசானே என் பாத்திரத்தையும்..” என்று இழுத்தவாறு தலையைக் குனிந்து கொள்கிறார்.
பரந்தாமன் புன்முறுவலுடன், “பேராசான் எளியோன். உன்னைப் போல் அல்லன். பரத வர்ஷத்தில் சிறு துரும்பு அசைந்தாலும் அதை அறிந்து கொள்ளும் சர்வ வல்லமை பெற்ற சூதர்கள் அனைவரிலும் நீக்கமற உள்ளதே அவர்தான்” என்கிறார்.
‘பேராசான் புராணம்’ கேட்க தன் மனதுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லையென்பதால், “வேறென்ன விசேஷம் ஐராவதத்தில்?” என பேச்சை மாற்ற முயல்கிறார் வியாசர்.
“குறியீடாக வைக்கப்பட்டிருக்கும் தலைப்பும், சென்னப்பட்டினத்தின் ஓவியங்களும், பெரும்பஞ்சத்தின் புகைப்படங்களும்.”
“எப்படி இது ஒடுக்கப்பட்டவர்களின் கதை ஆனது?”
“ ‘அய்யகோ.. பார்த்தாயா எத்தனை பாவப்பட்ட மக்கள் இறந்து கிடக்கிறார்கள்!’ என்ற பரிதாபதம் நாவல் முழுவதுமே கேட்கும். இது ஒரு சால சிறந்த உத்தியல்லவா?”
“பிரபோ.. பேராசானைத் தரிசிக்கும் ஆவலைத் தணிக்க முடியவில்லை.”
“அது சுலபம். ஆனால் அவரைச் சந்திக்கும் முன், நீர் உமது உள்மன படிமங்களைக் கடந்து விடுதல் நல்லது.”
“என்னையும் தன் வட்டத்தில் இணைத்துக் கொண்டு.. எனக்கும் தற்காலத்து கலை உத்திகளைச் சொல்லிக் கொடுப்பாரா?” என வியாசர் கேட்பதைக் கவனிக்காமல் நாராயணன் திரும்பிப் படுத்துக் கொள்கிறார். மீண்டும் திருமகள், நாராயணனின் காலைப் பிடிக்கத் தொடங்குகிறார்.
‘வியாஸன், தி புவர் அன்லக்கி ஃபெல்லோ’ என நினைத்துக் கொண்டது பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷன்.
- தினேஷ் ராம்
தனி ஒருவன் விமர்சனம்
ஒரு நல்லவனும் ஒரு கெட்டவனும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் தனி ஒருவன் படத்தின் கதை.
ஐ.பி.எஸ். அதிகாரி மித்ரனாக ஜெயம் ரவி. குற்றங்களைக் கண்டு பொங்கிடும் நல்லவர்; கல்வி கேள்விகளில் வல்லவர்; 24 மணி நேரமும் குற்றங்களைத் தேடியும், அதைப் பற்றியுமே யோசிப்பவர். அதைத் தடுப்பதற்காகவே ஐ.பி.எஸ்.சில் சேருகிறார். மிகச் சிறிய வயதிலேயே குற்றங்களையும், அந்தக் குற்றத்துக்கான காரணங்களையும் செய்தித் தாள்களிலேயே கண்டடையும் தனித் திறமை மிக்கவராகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறார். நாளடைவில் செய்தித் தாளில் வரும் செய்திகளுக்குப் பின்னால் வேறு உண்மை இருக்கக்கூடும் என்ற புரிதலும், ஒவ்வொரு பெரிய குற்றத்துக்கும் முன் ஒரு சிறு குற்றமிருக்கும் என்ற உண்மையும் அவருக்குப் புரிய வருகிறது. ஆக, 100 குற்றவாளிகளை உருவாக்கும் ஒரே ஒரு பெரிய குற்றவாளியைப் பிடிப்பதுதான் அவர் வாழ்வின் ஒரே லட்சியம்.
சிந்தாமல் சிதறாமல், சிறு சந்தர்ப்பத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமார்த்தியசாலி சிறுவன் பழனிச்சாமி. அப்படியொரு சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல், படித்து, ‘சித்தார்த் அபிமன்யு’ எனும் விஞ்ஞானியாகி, இந்தியாவிலேயே தொழில் தொடங்கி கோடீஸ்வரராகப் பரிணமிக்கிறான். பழனிச்சாமியாக நடித்த சிறுவன், படத்துக்கு அதகளமான ஓப்பனிங் தருகிறான். அதே போலவே, சித்தார்த் அபிமன்யுவாகக் கலக்கியிருக்கும் அரவிந்த் ஸ்வாமி, படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு போய், படத்தை அற்புதமாக முடித்து வைக்கிறார். தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான அசத்தலான வில்லன் வந்ததே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும் (மங்காத்தா அஜித் உட்பட!).
அப்படியென்ன சிறப்பு என்றால்.. தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் என்பவன் வெட்டுவேன்/குத்துவேன் என கடைசி நொடி வரை வில்லன் கெத்தை தற்காத்துக் கொள்ள கத்திக் கத்தியே நம்மைச் சாகடிப்பான். அல்லது பொசுக்கென்று திருந்தி விடுவான். ஆனால் அரவிந்த் ஸ்வாமி படத்தின் கடைசிக் காட்சியில் படு ஸ்டைலிஷாக, அசால்ட்டாகத் தோன்றி படத்தின் நாயகனாகி விடுகிறார். ஓர் அசலான புத்திசாலி வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி, மொத்த படத்தையும் சாதுரியமாக அரவிந்த் ஸ்வாமி தோளில் வைத்துவிட்டார் இயக்குநர் மோகன் ராஜா. அதற்குத் தோதாக இரட்டையர்கள் சுபாவின் வசனம் படத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.
ஒற்றை நோக்கோடு ஐ.பி.எஸ். அதிகாரியாகும் மித்ரன், அந்த லட்சியத்தை அடைந்து, எதிர்க்க வில்லனில்லாமல் ‘தனி ஒருவன்’ ஆகத் தவிப்பதாக படம் முடிகிறது. மித்ரனின் லட்சியத்தை மெச்சி, முதலமைச்சர் முதல் இறுதிச் சடங்கு செய்யும் ஐயர் வரை அனைவரும் அவருக்கு ஒத்துழைப்புத் தருகிறார்கள். திருநெல்வேலியில் போஸ்ட்டிங் கிடைத்த சுராஜ் ஐ.பி.எஸ். கூட, மித்ரனுக்கு உதவ துப்பாக்கியோடு வந்து விடுகிறார். அதே நேரத்தில், இரண்டே இரண்டு அடியாளை நம்பி ஏமாந்து ‘தனி ஒருவன்’ ஆகிவிடுகிறார் சித்தார்த். என்ன கலர் ஃபைல் சித்தார்த் உபயோகிப்பார் என்று யூகிக்குமளவு தீர்க்கதரிசி மஹிமா எனும் பாத்திரத்தில் நயன்தாரா வருகிறார். படத்தில் இவ்வளவு லாஜிக் ‘பக் (Bug)’-கள் இருந்தும், நாயகன் நெஞ்சில் ஒரு பக் வைத்து, மற்ற அனைத்து பக்-களையும் மறக்க வைத்து விடுகிறார் இயக்குநர். மித்ரன் Vs சித்தார்த்தின் ஆடுபுலி ஆட்டம் படத்தை சுவாரசியமாக்குகிறது.
தனி ஒருவன் – அரவிந்த் ஸ்வாமி.!
அதிபர் விமர்சனம்
அதிபர் எனும் தலைப்பு தொழிலதிபரைக் குறிக்கிறது. 2002 இல் இருந்து 2008க்குள் நடந்த உண்மைக் கதையின் அடிப்படையில் மசாலா அலங்காரம் பூசி எடுக்கப்பட்ட படம். குறிப்பாக தயாரிப்பாளர் சிவகுமாரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
கனடாவில் இருந்து தொழில் புரிய வரும் ஜீவன், ‘மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குகிறார். அவர் மிகவும் நம்பும் ஒருவராலேயே, நிறுவனத்துக்குள் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை.
படத்தில் நட்சத்திரப் பட்டாளங்களுக்குக் குறைவே இல்லை. வரிசை கட்டி வந்தவண்ணமே உள்ளனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி தோன்றியதும் படத்தின் சுவாரசியம் இரட்டிப்பு ஆகிறது. துரதிர்ஷ்டவசமாக நாயகன் ஜீவனை விட சமுத்திரக்கனியே மனதில் நிற்கும் கதாபாத்திரமாக உள்ளார். அவர், ‘பாஸு.. பாஸு’ எனப் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால் முதல் பாதியில், மிரட்டலாக அறிமுகமாகும் நந்தாவோ எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போய் விடுகிறார். வக்கீல் ஈஸ்வராக வரும் ரஞ்சித்தின் தாடியும், தலைமுடியும் மாறுவேடப் போட்டிக்குக் கலந்து கொள்ள வந்தவர் போல் உறுத்துகிறது.
தொய்வாகத் தொடங்கி எரிச்சலடைய வைத்தாலும், கதை தொடங்கியவுடன் படம் விறுவிறுப்பாகிறது. பிலிப் விஜயக்குமாரின் ஒளிப்பதிவு படத்தின் பலம். விக்ரம் செல்வாவின் பாடல்கள் ஈர்க்காவிட்டாலும், குறிப்பாக இரண்டாம் பாதியின் பின்னணி ஒலிப்பதிவு படத்துக்கு வலு சேர்க்கிறது.
சரத்குமார் நாயகனாக நடித்த ‘மாயி’ படத்தை இயக்கிய சூரிய பிரகாஷ்தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ஈஸ்வர் எனும் பாத்திரத்துக்கும், நாயகனுக்கும் நடக்கும் மைண்ட் கேமாக படத்தைக் கொண்டு போயிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகளை தியாகம் செய்ய வேண்டி வந்திருக்கும் என்ற கவலை காரணமாக இருக்குமோ?
பாரதிதாசன்
பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். பாரதிதாசன் என்பது இவரது இயற்பெயர் அல்ல. பெற்றோர்கள் வைத்த பெயர் சுப்புரத்தினம்.
இளம் வயதிலேயே தமிழார்வம் கொண்டிருந்தார். தனது பதினேழாவது வயதில் புலவர் தேர்வில் வெற்றியடைந்தார்.
பாரதிதாசன் புதுமைச் சிந்தனாவாதி, இவரது சிந்தனைகளுக்கு ஊக்கு சக்தியாக விளங்கியவர் மகாகவி பாரதியார்.
இவர் சிறிது காலம் மாடர்ன் தியேட்டர்சின் கதை இலாகாவில் பணியாற்றினார். பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழைத் தன் உயிரினும் மேலாக நேசித்தவர். இவரது ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்கிற கவிதை மிகவும் பிரபலமானது.
1937இல் முதன் முதலாக ‘பாலாமணி’ என்கிற படத்திற்குப் பாடல்கள் இயற்றினார். பிறகு 1940இல் ‘காளமேகம்’ என்கிற படத்தின் வசனம் – பாடல்கள் இவரால் எழுதப்பட்டது. எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் காளமேகமாக நடித்திருந்தார். எல்லிஸ்.ஆர்.டங்கன் ஒரு அமெரிக்கர்.
இதற்கிடையில் 1938இல் ஸ்ரீராமானுஜர் என்கிற ஒரு திரைப்படம் வெளிவந்தது. இலக்கியவாதி வ.ரா. என்று அழைக்கப்பட்ட வ.ராமசாமி ஐயங்கார் திரைக்கதை வசனம் எழுதிய இந்தப்படத்தில் சங்கு சுப்பிரமணியம், ந.ராமரத்தினம் ந.பிச்சமூர்த்தி போன்ற இலக்கிய வாதிகள் நடித்திருந்தனர். இதில் பாடல்கள் எழுதியிருந்தார் பாவேந்தர். தீண்டாமைக்கு எதிராக பல கருத்துக்களை அப்போதே முன் வைத்த அப்படத்தில் கவிஞரின் ஒருபாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.
ராமானுஜர் வைணவைத்தை உபதேசித்தபடி நாடு முழுவதும் யாத்திரை மேற்கொள்கிறார். அப்போது திருவாலி க்ஷேத்திரத்தில், திருவாலி மங்கை எனும் தீண்டத்தகாத ஒரு பெண்ணை எதிர் கொள்ளும் ராமானுஜர், அப்பெண்ணை விலகி நிற்கச் சொல்கிறார். அதற்கு அப்பெண் பாடுவதாக அமைந்த காட்சி.
‘எப்பக்கம் சாமி
விலகச் சொன்னீங்க?
இத்தே கேளுங்கோ,
கோவிச்சுக்காதீங்க – இப்பக்கம்
கண்ணபுரமிருக்குங்க! எதிர்ப்
பக்கத்திலோ திருமணக்கொல்லை!
ஒங்கோ பக்கம் வந்தா
ஒத்திக்கோன்னுவீங்கோ!
ஒதுங்கிப் போயிட்டாலும்
திருமங்கை மன்னன் – அய்யங்
கோவிந்தன் ஆகாசத்தே!
அடிமை கேட்ட கேள்வி -
ஏது பதிலுங்கோ?’
ராமானுஜருக்கு என்ன சொல்ல இயலும்? திருவாலி மங்கையின் வாதத்தின் உண்மையை ஒப்புக்கொள்வதைத்தவிர!
1946இல் மாடர்ன் தியேட்டர்சாரின் ‘சுபத்திரை’ என்கிற படத்திற்கு வசனம் எழுதினார் பாரதிதாசன்.
புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நூல் ‘எதிர்பாராத முத்தம்’, இந்நூலைத் தழுவி 1950இல் ‘பொன்முடி’ என்கிற ஒரு திரைப்படம் வெளிவந்தது. நரசிம்மபாரதி, மாதுரிதேவி நடித்த படம். அப்படத்தில் காதல்காட்சிகளில் இருந்த நெருக்கம் அந்தக்காலத்தில் திரையுலகில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பாவேந்தர் ஒரு புரட்சிகரமான கவிஞர். எனவேதான் அறியாமையில் உழன்று கொண்டிருந்த அக்கால சமுதாயத்தை தனது வீரிய கவிதைகள் மூலம் எழச் செய்து, தமிழர்களிடையே ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தினார். பாவேந்திரைப் பின்பற்றி அவரை குருவாக மதித்து ஏராளமான கவிஞர்கள் புதிதாகத் தோன்றினார்கள். கவிஞர் சுரதா, வாணிதாசன், சாலை இளந்திரையன், குருவிக்கரம்பை சண்முகம், பொன்னடியான் போன்ற மிகச்சிறந்த மரபுக்கவிஞர்கள், பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்ற பெருமையை அடைந்தார்கள்.
தமிழை – கவிதையை, பெண்விடுதலை, சமூகநீதி போன்ற உத்தமமான காரியங்களுக்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
பாவேந்தரை தமிழ்க்கவிதை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை பாரதியாரைச் சாரும். பாரதியாரையே தனது குருவாகப் பாவித்துக் கொண்டார் பாரதிதாசன். எனவேதான் சுப்புரத்தினம் என்கிற தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிவைத்துக் கொண்டார்.
‘குயில்’ என்கிற பத்திரிகை ஒன்றை சில காலம் நடத்தியிருக்கிறார். உதிரி, உதிரியாக இவர் எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டு 1938ல் வெளிவந்திருக்கிறது.
நாடகங்களும் எழுதியுள்ளார். குறிப்பாக, ‘பாண்டியன் பரிசு’ கதை நாடகமாக எழுதப்பட்டு பெரும் வெற்றியை ஈட்டியது. இவை தவிர ஏராளமான கவிதைகள் எழுதி, ’பாரதிக்குப்பின், பாரதிதாசன்’ என்கிற பெயரை நிலை நிறுத்திக் கொண்டார்.
பாவேந்தரின் திரைப்படப்பணி 1956ல் வெளிவந்த ‘நானே ராஜா’ வரையிலும் நீடித்தது.
கடைசிக் காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆட்பட்டிருந்த பாவேந்தர், உடல் நலம் குன்றி 1964ல் ஏப்ரல் மாதம் சென்னையில் காலமானார்.
வாழ்க வாழ்கவே – வாழ்கவே
வளமார் எமது திராவிட நாடு
வாழ்க, வாழ்கவே – வாழ்கவே
பாரதிதாசன் பங்கேற்ற திரைப்படங்கள்:
1937 – பாலாமணி வசனம்
1938 – ஸ்ரீராமானுஜர் பாடல்
1940 – காளமேகம் வசனம்
1950 – பொன்முடி கதை, வசனம்
1951 – ஓர் இரவு பாடல் (துன்பம் நேர்கையில்)
1951 – மணமகன் பாடல்
1952 – வளையாபதி பாடல்
1953 – திரும்பிப்பார் பாடல்
1954 – கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி பாடல் (வெண்ணிலாவும் வானும் போலே)
1956 – நானே ராஜா பாடல்
1965 – பஞ்சவர்ணக்கிளி பாடல் (தமிழுக்கு அமுதென்று பேர்)
- கிருஷ்ணன் வெங்கடாசலம்
பாயும் புலி விமர்சனம்
காவல்துறை அதிகாரி ஒருவர், எப்படியெல்லாம் பாய்ந்து தன் கடமையைச் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
அசிஸ்டெண்ட் கமிஷ்ணர் ஜெயசீலனாக விஷால். ஒரு எஸ்.ஐ.-இடம் தனது செயலுக்கான நியாயத்தை மிகவும் பொறுமையுடன் விளக்கும் நல்லவர். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். படத்திலுள்ள அனைத்து வில்லன்களும் எத்தனை பேரைக் கொல்கிறார்களோ, அதை விட அதிகமான நபர்களை இவர் கொல்கிறார். சாரி, என்கவுண்ட்டர் செய்கிறார். இந்தப் படத்திற்கு ‘காவல் கோட்டம்’ என பெயர் வைக்கத் திட்டமிட்டு இருந்தனராம்.
சாலையைக் கடக்கப் பயப்படும் செளம்யாவாக காஜல் அகர்வால். ‘நான் மகான் அல்ல’ படத்தில் கவர்ந்தது போல் கவரவில்லை. படத்தின் முதல் பாதியைக் காப்பாற்றுவது, படத்தோடு சம்பந்தமில்லாத காமெடி ட்ராக்கில் வரும், மனைவிக்குப் பயந்த கான்ஸ்டபிள் சூரிதான்.
இரண்டாம் பாதியைச் சுவாரசியப்படுத்துகிறார் தொழிலதிபர் செல்வமாக வரும் சமுத்திரக்கனி. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக உருவாகிவிட்டார். ஏற்கும் அனைத்துக் கதாபாத்திரங்களையும் கர்மச்சிரத்தையோடு உள்வாங்கி நடிக்கிறார். “அரசியலில் அப்பப்ப முடிவெடுக்கணும்” என எதிர்பார்ப்பை மட்டுமே தூண்டிக் காணாமல் போகிறார் ஆர்.கே. படத்தின் இன்னொரு ஆச்சரியம், நாயகன் அறிமுகத்திற்கு முன் வரும் ஹரிஷ் உத்தமனின் அசத்தலான காட்சிகள். கொல்லப்பட்ட எஸ்.ஐ. ஆல்வின் சுதன், ஆல்பர்ட் எனும் அந்தப் பாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா போன்றதொரு படத்தைத் தொடர்ந்து, சற்றும் எதிர்ப்பார்க்காத கோணத்தில் ஒரு கருவை எடுத்துள்ளார் சுசீந்திரன். தங்களது குடும்பத்திற்கென இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, ஒரு குடும்பமே சேர்ந்து அந்தக் குடும்பத்துக்குள் இருக்கும் ஒருவரை பலி கொள்வதுதான் படத்தின் கரு. கெளரவக் கொலையை ஆதரிக்கும் இப்படம், சாதியையோ மதத்தையோ கெளரவமாகக் கருதாதது மிகச் சிறிய ஆறுதல்.
உனக்கென்ன வேணும் சொல்லு –ட்ரைலர் லான்ச் படங்கள்
தனி ஒருவன் –நன்றி நவில்தல் சந்திப்புப் படங்கள்
கொத்தமங்கலம் சுப்பு
சிறந்த இலக்கியவாதிகள் திரைப்படத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என நிரூபித்த ஓர் இலக்கியவாதி கொத்தமங்கலம் சுப்பு.
கலைஞர் மு. கருணாநிதி, கதை வசனகர்த்தா இளங்கோவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிக அளவில் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றியிருப்பவர் கொத்தமங்கலம் சுப்பு என்கிற எஸ்.எம்.சுப்ரமணியம்.
1936இல் எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்த ‘சந்திரமோகனா’ என்னும் திரைப்படத்தில் எம்.கே.ராதாவின் தோழன் வேணுகோபாலாக நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இதன்பிறகு 1937இல் மைனர் ராஜாமணி என்கிற படத்தில் ஒரு நல்ல வேடம். சிங்காரப் பப்புச் செட்டியார். தொடர்ந்து அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்தசக்குபாய், அடங்காப்பிடாரி, சுகுணசரசா, பக்த சேதா, சூர்ய புத்ரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், நந்தனார் (ஜெமினி) பக்த நாரதர், தாசி அபரஞ்சி, போன்ற படங்களில் நடித்தார். இதன் பிறகு எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி நிறுவனத்தில் சேர்ந்தார். இவரது திறமையை நன்குணர்ந்திருந்த எஸ்.எஸ்.வாசன் தனது பல படங்களுக்கு இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பான ‘கண்ணம்மா என் காதலி’ திரைப்படத்திற்கு வசனம் தவிர இயக்கமும் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்தான். இந்தப் படத்திற்கு முன்பாக வெளிவந்த ஜெமினியின் ‘தாசி அபரஞ்சி’ பட அனுபவம், ‘கண்ணம்மா என் காதலி’ படத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. 1945இல் இப்படம் வெளிவந்தது. கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் திருமணம் செய்து கொண்ட நடிகை எம்.எஸ்.சுந்தரிபாய் இப்படத்தில் கதாநாயகியாக, எம்.கே.ராதாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு முழுநீள நகைச்சுவைப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொத்தமங்கலம் சுப்புவுக்கு மிகவும் புகழை ஏற்படுத்திக் கொடுத்த படம் ‘மிஸ். மாலினி’ இதுவும் ஜெமினி தயாரிப்பு தான். பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் மிஸ்டர் சம்பத் என்கிற நாவலை ஜெமினி நிறுவனத்தார் திரைப்படமாகத் தயாரித்து 1947இல் வெளியிட்டனர். இப்படத்தில் ‘சம்பத்’ ஆக மிகவும் சிறப்பாக நடித்து மிகப்பெரிய பெயரைப் பெற்றார் கொத்தமங்கலம் சுப்பு. இப்படத்தில் ஒரேயொரு காட்சியில் அப்போது பிரபலமாகாத ஜெமினி கணேசன் தலையைக் காட்டியிருந்தார்.
இப்படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில்தான் இரண்டாவது உலகப் போர் முடிந்தது. நாட்டில் பஞ்சம் ஏற்பட்டிருந்த காலம். ஏராளமான தேவையான பொருட்கள் ரேஷன் கடையில் தான் பெற வேண்டும். இந்த ரேஷன் முறையையும், வாழ்க்கை அவலத்தையும் கிண்டல் செய்த பாடல் ஒன்று இப்படத்தில் இடம் பெற்றிருந்தது.
‘காலையில எழுந்திரிச்சு
கட்டையோட அழுவணும்’
என்று தொடங்கும் இப்பாடலில், சில ரசமான வரிகள் இடம் பெற்றிருந்தன.
‘சக்கரைக்குக் கியூவில போய்
சாஞ்சுகிட்டு நிக்கணும்
சண்ட போட்டு பத்து பலம்
சாக்கட மண் வாங்கணும்’
என நீண்டு கொண்டே போகும் பாடல் மிகவும் பிரபலமாயிற்று.
இப்படத்தில் இடைவேளைக்குப் பிறகு உதிரியாக, கார்ட்டூன் தாணுவின் கார்ட்டூன் படம் ஒன்று காண்பிக்கப்பட்டது அக்காலத்தில் ஒரு புதுமையான நிகழ்ச்சி.
இதைத் தொடர்ந்து ஜெமினியிலிருந்து 1948இல் ‘ஞான சௌந்தரி’ என்றொரு படம் வந்தது. அதே நேரம் சிட்டாடல் கம்பெனியாரும் இதே கதையைத் தயாரித்து வெளியிட்டனர். ஜெமினி ‘ஞான சௌந்தரிக்கு’ கொத்தமங்கலம் சுப்பு, கே.வி. வேணுகோபால் மற்றுமொருவர் ஆக மூன்று பேர் கூட்டாக வசனம் எழுதியிருந்தனர். ஆனால் சிட்டாடலின் ‘ஞான சௌந்தரி’ படம்தான் மகத்தான வெற்றியடைந்தது. ஜெமினியின் ‘ஞான சௌந்தரி தோல்வியைத் தழுவியது. ஜெமினியிலிருந்து தோல்விப்படம் என்பதே கிடையாது. எனவே இப்படத்தின் தோல்வி வெகுநாள் வரை அப்போது பேசப்பட்டது.
இதையடுத்து வி.நாகையா நடித்த ‘சக்ரதாரி’ என்கிற படம் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றியை ஈட்டியது. இப்படத்தில் சில பாடல்களை சுப்பு எழுதியிருந்தார். இப்படத்திலும் ஜெமினி கணேசன் ஒரு சிறிய பாத்திரத்தில் சற்று நேரம் வந்து போனார்.
இதே ஆண்டில்தான் ஜெமினியின் திரைக்காவியம் ‘சந்திரலேகா’ வெளியிடப்பட்டு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தயாரிக்கப்பட்ட காலத்தில் (1947-48) இப்படத்திற்கு 30 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது. இது அக்காலத்தில் ஒரு மிகப் பெரிய தொகை. இப்படம் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது. ஆங்கில ‘சப் டைட்டில்’ போட்டு ஆங்கிலத்திலும் வெளியிட்டனர். இந்தியாவிலேயே அதிக பிரிண்ட் (சுமார் 610) போட்ட படம் என்கிற பெயரும் இப்படத்திற்கு உண்டு. இப்படத்தில் கே.ஜே.மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு ஆகியோருடன் கொத்தமங்கலம் சுப்புவும் இணைந்து வசனம் எழுதியிருந்தார்.
கொத்தமங்கலம் சுப்புவிற்கு நாட்டுப்பாடல்கள் மீது அலாதிபிரியம் உண்டு. நாட்டுப்பாடல்கள் மெட்டில் அவரே பல பாடல்களும் எழுதியுள்ளார். இந்த ஆர்வத்தின் காரணமாக ஒரு அருமையான பழைய நாட்டுப்பாடல் ஒன்றை இப்படத்தில் சேர்த்திருந்தார்.
‘ஆத்தோரம் கொடிக்காலாம்,
அரும்பரும்பா வெத்திலையாம்,
போட்டா சிவக்குதில்லே,
பொன் மயிலே உன் மயக்கம்,
வெட்டி வேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்’
என்கிற தொகையறாப் பாடலாக இப்படத்தில் இப்பாடல் ஒலித்தது. இன்றளவும் நம் காதுகளை விட்டு அகலவில்லை.
ஜெமினியின் அடுத்த படம் ‘அபூர்வ சகோதரர்கள்’ எம்.கே.ராதா இரட்டை வேடத்தில் நடித்த அற்புதமான படம். அலக்ஸாந்தர் டூமாவின் ‘கார்சிகன் பிரதர்ஸ்’ என்கிற நாவலை ஆதாரமாகக் கொண்ட படம். இந்தப் படத்தில் சுப்பு சில பாடல்களை இயற்றியிருந்தார். இது ஜெமினியின் மகத்தான வெற்றிப்படங்களில் ஒன்று. 1949இல் வெளிவந்தது.
1951இல் ‘சம்சாரம்’ என்று ஒரு படம். இதுவும் ஜெமினி தயாரிப்பு. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழாதவர்களே கிடையாது என்பார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் அழுதக் கண்களோடுதான் வருவார்கள். அந்த அளவு சோகமான இப்படத்தில் எம்.கே.ராதா கதாநாயகன். பாடல்கள் சுப்பு எழுதியிருந்தார். ‘அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே’ என்கிற இப்படப்பாடல் தமிழ் நாட்டின் பிச்சைக்காரர்கள் அனைவராலும் அனேக ஆண்டுகள் பாடப்பட்டது.
இதன் பிறகு வந்த படம் மூன்று பிள்ளைகள் மூன்று பிள்ளைகளில் ஒருவராக ஓரளவு நல்ல பாத்திரத்தில் ஜெமினி கணேசன் நடித்திருந்தார். மிகவும் சிரம தசையில் இருந்த சந்திரபாபுவுக்கு இந்தப்படத்தில் ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. இப்படத்திற்குப் பாடல்களை சுப்பு எழுதியிருந்தார்.
ஜெமினியின் அடுத்த மகத்தான தயாரிப்பு ஔவையார். இது ஒரு மாபெரும் வெற்றிச் சித்திரம். இப்போதும் கூட அடிக்கடி சின்னத் திரையில் கண்டு களிக்கலாம். மிகப் பிரம்மாண்டமான இப்படத்தின் திரைக்கதை, பாடல், இயக்கம் அனைத்தையும் ஏற்று ஔவையார் படத்தை ஓர் அற்புத காவியாக உருவாக்கிய பெருமை கொத்தமங்கலம் சுப்புவுக்கு உண்டு.
அதோடு இப்படத்தில் மனைவிக்கு பயந்தவராக ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர் நடித்த காட்சிகள், கொத்தமங்கலம் சுப்பு எந்த அளவு அற்புதமான நடிகர் என்பதையும், எடுத்துக்காட்டியது. நட்ட கல் ஒன்றை மனைவியாக உருவகப்படுத்தி, தன்னந்தனியே ஓர் இடத்தில் அமர்ந்து அதட்டிக் கொண்டிருப்பார். அந்நேரம், மிகவும் பசியுடன் ஔவையார் அங்கு வந்து சேருகிறார். தனக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யும்படி சுப்புவை வேண்டுகிறார். ஏதேதோ சாக்குப்போக்கு சொல்லி ஔவையாரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்வார். என்றாலும் ஔவையாரின் வற்புறுத்தலுக்குப் பணிந்து, தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். ஔவையாரை வெளியிலே நிறுத்திவிட்டு, வீட்டினுள் செல்வார். கோபமாக இருந்த மனைவியிடம் நைசாகப் பேசி விஷயத்தைத் கூறுவார். கோபமடைந்த மனைவி சுந்தரிபாய், பாத்திரப் பண்டங்களையெல்லாம் வீசி எறிவாள். ஒரு வழியாக, கடைசியில் மனைவியைச் சமாதானப்படுத்தி, சம்மதிக்க வைத்து விட்டு வெளியே வருவார். ஔவையாருக்கு எல்லாம் புரிந்துவிடும். ஆனால் சுப்பு, வீட்டினுள் பூனை ஒன்று வந்து அட்டகாசம் செய்ததாகக் கூறி, ‘அடிச்சிட்டேன்’ என்று வசனம் பேசுவார். நகைச்சுவையின் உச்சமான அக்காட்சி ரசிகர்களால் கைதட்டி ரசிக்கப்பட்டது.
ஔவையாரும் சுப்புவும் சாப்பிட அமர்கிறார்கள். ‘கடு கடு’ வென்ற முகத்துடன் பரிமாறும் சுந்தரிபாயின் உபசரிப்பில் கோபமடைந்த ஔவையார் உணவருந்தாமலேயே வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். போகும்போது, சுப்புவைப்பார்த்து ஒரு பாட்டு, அந்தப் பாட்டில் மனைவி என்பவர் எப்படி இருக்க வேண்டுமெனவும், அப்படி இல்லாவிட்டால் கணவன் என்ன செய்ய வேண்டும் எனவும் பாடுகிறார். அந்தப் பாட்டின் கடைசி அடி,
‘சற்றேனும் ஏறுமாறாக
இருப்பாளேயாமாகில்,
கூறாமல் சந்நியாசம் கொள்’
என்று முடியும்.
வீட்டிற்குள் செல்கிறான் கணவன் (சுப்பு), சட்டையைக் கழற்றி எறிகிறான். உடலெல்லாம் விபூதிப்பட்டைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்ப எத்தனிக்கையில், மனைவி தடுத்து என்னவென்று கேட்கிறாள்.
‘சட்டை கழன்றது,
சம்சாரம் விட்டது’
என்று கூறி சந்நியாசியாக வெளியேறுகிறான். திரையரங்கில் கைதட்டல் காதைப் பிளக்கும்.
1955இல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ ஒரு ‘கிளாஸிக்’ வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய திரைப்படம். சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதை, வசனம், பாடல், இயக்கம் அனைத்தும் சுப்பு ஏற்று, மிகச் சிறப்பாக இப்படத்தை எடுத்தார். இதுவும் ஒரு வெற்றிப்படம்.
மூன்று ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, 1958இல் ஜெமினியிலிருந்து வெளியான மற்றுமொரு பிரம்மாண்டமான திரைப்படம் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ மிகவும் வெற்றியடைந்த படம். பத்மினி – வைஜயந்திமாலாவின் போட்டி நடனத்தையும் பி.எஸ்.வீரப்பாவின், ‘சுபாஷ், சரியான போட்டி!’ வசனத்தையும் எவரும் மறந்திருக்கமுடியாது. இப்படத்திற்கான வசனம், பாடல் கொத்தமங்கலம் சுப்பு, அத்துடன் ஆரம்பக் காட்சி ஒன்றில் ஒரு முஸ்லிம் பெரியவராக ஒரேயொரு காட்சியில் வந்து மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.
இப்படத்திற்குப் பிறகு ஜெமினியிலிருந்து வெளியே வந்து விட்டார் கொத்தமங்கலம் சுப்பு, என்றாலும் வாசனின் ஆனந்த விகடனில் கலைமணி என்கிற பெயரில் எழுத ஆரம்பித்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ மிகுந்த பரபரப்புடன் தொடராக வெளிவந்து கொத்தமங்கலம் சுப்புவுக்கு மிகப்பெரிய இலக்கிய அந்தஸ்தை அளித்தது.
கொத்தமங்கலம் சுப்புவுக்கு வில்லுப்பாட்டில் விசேஷ அக்கறை இருந்திருக்கிறது. காந்திமகான் கதையை இவர் வில்லுப்பாட்டு மூலமாக தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நடத்தி மிகவும் பிரசித்தி பெற்றார்.
தில்லானா மோகனாம்பாள் தொடர் வெளிவந்து சில காலத்திற்குப்பின், ‘ராவ் பகதூர் சிங்காரம்’ என்னும் ஒரு தொடரும் வெளி வந்து வெகுஜன வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு புதினங்களுமே திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு ‘தில்லானா மோகனாம்பாள்’ மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. ‘ராவ் பகதூர் சிங்காரம்’ புதினத்தை ஜெமினி நிறுவனம் ‘விளையாட்டுப் பிள்ளை’ என்கிற பெயரில் படமாக்கினார்கள். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
ஜெமினியை விட்டு வெளியே வந்துவிட்டாலும் அந்நிறுவனம் தயாரித்து 1960இல் வெளிவந்த ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் வசனம், பாடல் எழுதும் பொறுப்பு இவருக்கே அளிக்கப்பட்டது. அதே ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தாரின் ‘களத்தூர் கண்ணம்மா’ என்கிற படத்தில் சிறுவர்கள் நடிக்கும் ஒரு நாடகத்தின் பாடல்களை சுப்பு எழுதினார். சிறு முயலாக கமலஹாசன் நடித்த இந்த நாடகமும், அதன் பாடல்களும் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றன.
வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்துடன் இணைந்து 1965இல் படித்த மனைவி படத்திற்கு வசனம் எழுதினார். இதற்கிடையில் ‘பாவமன்னிப்பு’ படத்தில் குப்பத்தில் வசிக்கும் ஒரு பிராமணராக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு 1967 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 1971இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
கொத்தமங்கலம் சுப்பு போன்ற சிறந்த கலைஞர்கள் எப்போதாவதுதான் தோன்றுவார்கள்.
சுப்புவின் திரைப்பணிகள்:
1938 – அனாதைப்பெண் நடிப்பு
1939 – அதிர்ஷ்டம் நடிப்பு
1939 – சாந்த சக்குபாய் வசனம், நடிப்பு
1939 – அடங்காப்பிடாரி நடிப்பு
1939 – சுகுண சரசா நடிப்பு
1940 – பக்த சேதா நடிப்பு
1941 – சூர்ய புத்ரி நடிப்பு
1941 – மதனகாமராஜன் நடிப்பு
1942 – நந்தனார் நடிப்பு (ஜெமினி)
1942 – பக்த நாரதர் நடிப்பு
1944 – தாசி அபரஞ்சி கதை, வசனம், பாடல், நடிப்பு (ஜெமினி)
1945 – கண்ணம்மா என் காதலி வசனம், இயக்கம் (ஜெமினி)
1947 – மிஸ் மாலினி வசனம், இயக்கம் (ஜெமினி)
1948 – ஞான சௌந்தரி வசனம் (கூட்டாக)
1948 – சக்ரதாரி பாடல் (ஜெமினி)
1948 – சந்திரலேகா வசனம் (கூட்டாக) (ஜெமினி)
1949 – அபூர்வ சகோதரர்கள் பாடல் (ஜெமினி)
1951 – சம்சாரம் பாடல் (ஜெமினி)
1952 – மூன்று பிள்ளைகள் பாடல் (ஜெமினி)
1953 – ஔவையார் திரைக்கதை, பாடல், இயக்கம், நடிப்பு (ஜெமினி)
1955 – வள்ளியின் செல்வன் திரைக்கதை, நடிப்பு, இயக்கம் (ஜெமினி)
1958 – வஞ்சிக்கோட்டை வாலிபன் வசன பாடல், நடிப்பு (ஜெமினி)
1960 – இரும்புத் திரை வசனம், பாடல் (ஜெமினி)
1960 – களத்தூர் கண்ணம்மா பாடல் (ஏவிஎம்)
1965 – படித்த மனைவி வசனம் (கூட்டாக)
1968 – தில்லானா மோகனாம்பாள் கதை
1970 – விளையாட்டுப் பிள்ளை கதை
- கிருஷ்ணன் வெங்கடாலசம்
உனக்கென்ன வேணும் சொல்லு – படக்குழுவினர்
நடிகர்கள்:
>> தீபக் பரமேஷ்
>> ஜாக்குலின் பிரகாஷ்
>> குணாலன் மோகன்
>> மோர்ணா அனிதா ரெட்டி
>> ‘மைம்’ கோபி
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
>> தயாரிப்பு நிறுவனம் – ஜூனா பிக்சர்ஸ் பிரைவட் லிமிடெட்
>> தயாரிப்பு - ஷண்முகசுந்தரம் , K முகமது யாசின்
>> இயக்கம் – ஸ்ரீநாத் ராமலிங்கம்
>> கதை – M.R.K. & ஸ்ரீநாத் ராமலிங்கம்
>> ஒளிப்பதிவு – மணிஷ் மூர்த்தி
>> படத்தொகுப்பு – ஹரி ஹரன்
>> இசை – சிவ சரவணன்
>> கலை - C.H.மோகன்ஜி
எவரெஸ்ட் 3டி விமர்சனம்
(Everest 3D)
1996-இல், எவரெஸ்ட் சிகரத்தில் நிகழ்ந்த உறைய வைக்கும் ஒரு விபத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மிரட்டலான படம்.
‘அட்வென்ட்சர் கன்சல்டன்ட்ஸ் (Adventure Consultants)’ என தான் தொடங்கிய நியூசிலாந்து ட்ரெக்கிங் நிறுவனத்தின் சார்பாக, எவரெஸ்ட் சிகரமேற ராப் ஹால் எட்டுப் பேரை அழைத்துச் செல்கிறார். அந்தக் குழு எதிர்கொண்ட இயற்கைச் சீற்றத்தை முப்பரிமாணத்தில் காட்டி முதுகு தண்டைச் சில்லிட வைத்துள்ளார் இயக்குநர் பல்டசர் கொர்மக்குர்.
குழுவை வழிநடத்தும் தலைவர் ராப் ஹாலாக ஜேஸன் க்ளார்க் நடித்துள்ளார். இவர், போன வருடம் வெளிவந்த ‘டான் ஆஃப் த ப்ளேனட் ஆஃப் த ஏப்ஸ்’ படத்தில் நாயகன் சீஸரைக் கண்டு வியக்கும் மால்கமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவரையும் எவரெஸ்ட் சிகரத்திலேற்றி, அவர்கள் மகிழ்வதைக் கண்டு ரசிக்கும் பொறுப்பான வழிகாட்டியாக உள்ளார். குழுவில் இருந்து, மிகவும் பின் தங்கி தாமதாக ஏறும் டக் ஹேன்ஸனையும் எவரெஸ்ட் உச்சிக்கு அழைத்துச் சென்று ரசிக்கிறார். அந்தப் பொறுப்புணர்ச்சியே அவரைச் சிக்கலில் ஆழ்த்திவிடுகிறது.
நைட் க்ராலர் படத்தில் நாயகனாகக் கலக்கிய ஜேக் க்லைன்ஹால், 17000 அடி உயரத்திலுள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பில் சட்டை போடாமல் ஜம்மென அறிமுகமாகிறார். பெக் வெதர்ஸ் எனும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஜோஷ் ப்ரோலின் நடித்துள்ளார். அந்த விபத்தில் இன்று மீண்ட பெக் வெதர்ஸ், தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளராக தற்போது செயல்பட்டு வருகிறார். இவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்க, ஓர் உலகச் சாதனை நிகழ்த்தப்பட்டதாகத்த் தெரிகிரது. உலகின் உயரமான இடத்தில் ‘ரிஸ்க்’ எடுத்து ஹெலிகாப்டரைத் தரையிறக்கி பெக் வெதர்ஸைக் காப்பாற்றியுள்ளனர்.
அவ்வளவு சுலபத்தில் எட்டி விட முடியாத இமயத்தின் உயரங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் காட்டுகின்றனர். லுக்லா (9383 அடி), நம்ஸே பஜார் (12343 அடி), டெங்போச் மடம் (12687 அடி), தொக் லா மலையேறிகளின் நினைவிடம் (16000 அடி) என இமயத்தின் அழகை கண் முன் கொண்டு வந்துள்ளனர். உயரம் அதிகம் ஆக ஆக, அழகான இமயம் அச்சுறுத்தக்கூடிய இயற்கைப் பொக்கிஷமாக உரு கொள்கிறது. குறிப்பாக 20000 அடி உயரத்திற்குப் பிறகு, வெள்ளை வெளேரென்று பனி சூழ்ந்த சிகரங்கள் பிரமிப்பையும் பயத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. அதிலும், 27000 அடிக்கு மேலிருக்கும் செளத் ஈஸ்ட் ரிட்ஜ் (South east ridge) பள்ளத்தாக்கு விளம்பில் நம்மை நிறுத்தி பதைபதைக்க வைக்கின்றனர் (தவறாமல் 3-டியில் பார்க்கவும்).
ஜாலியான சுற்றுலா போல் தொடங்கும் படம், கனத்த மெளனத்தை நம் மீது விட்டு விட்டுச் செல்கிறது. கற்பனைக்கு எட்டாத இயற்கையின் பிரம்மாண்டத்தையும், மனித வாழ்வின் மகத்துவத்தையும் எவரெஸ்ட் உணர்த்துகிறது.
வியத்தகு விசாரணை – வியந்த இயக்குநர் விஜய்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த படம். அவர் தனது மாஸ்டர் பீஸை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு, நான் வாயடைத்துப் போனேன். அவர் திரைக்கதையைக் கையாண்ட விதத்திலும், கதாபாத்திரத் தேர்விலும் மாயம் செய்துள்ளார். அனைவரும் உண்மையிலேயே படத்தில் வாழ்ந்துள்ளனர்.
தினேஷ், சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்துக்கும், மொத்த குழுவிற்கும் பெரிய வாழ்த்துகள். இந்தப் படம் அனைத்து வகையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்திய சினிமாவின் அடையாளமாகவே ஒட்டுமொத்த உலகிற்கும் விளங்கப் போகிறது.
தமிழ்த் திரையுலகத்திற்கு பெருமையான தருணமாக இது அமையப் போகிறது. படத்தை ரிலீஸுக்கு முன்பாகவே பார்க்க முடிந்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய படம். திரையரங்குகளில் வெளியானதும், தவறவிடாமல் அனைவரும் பாருங்கள்.
மனதைக் கனக்க வைக்கும் அனுபவமாக இரருக்கப் போகிறது.
- ஏ.எல்.விஜய்
சவரகத்தியின் இடையில்
இயக்குநர் மிஷ்கின் பிசாசு படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, ‘சவரகத்தி’ எனும் படத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் அவர் தனது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தைப் பற்றி அறிவித்துள்ளார். ‘ட்ரான்ஸ் வேர்ல்ட் டெலி கம்யூனிகேஷன்ஸ் (Trans World Telecommunications)’ என்ற புதிய நிறுவனத்தின் மூலம் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் புது முகம் ஷ்யாம்.
இந்தப் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிக, நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. ‘சவரகத்தி’ படத்தின் இடைவிடாத படப்பிடிப்பின் இடையில் இயக்குநர் மிஷ்கின் தனது புதிய படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
நாஞ்சில்நாடு இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி. 1956இல் மொழி வாரி மாகாணங்கள் அமைவது வரை திருவிதாங்கூர் – கொச்சி சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. மலையாளத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்த அந்த நாஞ்சில் நாட்டுப் பகுதி தமிழுக்கு அளித்த கொடை மிக அதிகம்.
தசாவதானி செங்குத்தம்பி பாவலர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ம.அரங்கநாதன், பொன்னீலன், தமிழவன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், ஹெப்சிபா ஜேசுதாசன், கிருத்திகா, தோப்பில் முகம்மது மீரான் போன்ற மிகச் சிறந்த இலக்கிய வாதிகளை தமிழுக்குத் தந்திருக்கிறது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மிகச் சிறந்த கவிஞர். பெரியவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல், குழந்தைப் பாடல்கள் பலவும் மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார்.
‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு,
அங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக் குட்டி’
‘தம்பியே பார், தங்கையே பார்,
சைக்கிள் வண்டி இதுவே பார்’,
போன்ற குழந்தைப்பாடல்கள், அக்காலங்களில் ஆரம்பப் பள்ளிப் புத்தகங்களில் தவறாது இடம் பெறுவது வழக்கம்.
பெரியவர்களுக்காக, மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம், மருமக்கள் வழி மான்மியம் போன்ற கவிதை நூல்களைப் படைத்துள்ளார். இவைகள் யாவுமே மிகுந்த இலக்கியத்தரம் வாய்ந்தவை.
கவிமணியின் ‘மருமக்கள் வழி மான்மியம்’ மிகவும் பரபரப்பாக அக்காலத்தில் பேசப்பட்டது. மருமக்கள் வழி மான்மியம் என்பது திருவிதாங்கூரில் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சொத்துரிமை சம்பந்தமான ஓர் ஏற்பாடு. சட்டம் போல் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த முறையின்படி ஒருவருக்குப் பிறந்த மகனுக்கோ, அல்லது மகளுக்கோ தகப்பனாரின் சொத்தில் உரிமை கிடையாது. மருமகன் (சகோதரியின் மகன்) களுக்கே தந்தையின் சொத்துகள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அரசர்களுக்கும் அப்படித்தான் இவ்வாறே தான் திருவிதாங்கூரின் அரசர்கள் அனைவரும் ஆட்சிக்கு வந்தார்கள்.
கவிமணி இம்மாதிரியான ஏற்பாட்டிற்கும், சட்டங்களுக்கும் எதிர்ப்பாளர். எனவே இம்முறையைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட கவிதை நூல்தான் ‘மருமக்கள் வழி மான்மியம்’.
அக்காலத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளை மிகவும் தைரியமாக விமர்சனம் செய்திருக்கிறார்.
ஒரு நீதிமன்றக் காட்சி, சாட்சியிடம் வக்கீல் ஒருவர் கேள்வி கேட்டு விசாரணை செய்கிறார்.
வக்கீல் - ஓடுற குதிரைக்கு கொம்பு ஒண்ணா? ரெண்டா?
சாட்சி - குதிரைக்கு ஏதுங்க கொம்பு?
வக்கீல் - கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. கேட்ட கேள்விக்கு
பதில். கொம்பு ஒண்ணா? ரெண்டா? அதைத்தான் சொல்லணும்.
இந்த ரீதியில் தான் நீதிமன்ற நடவடிக்கை அக்காலத்தில் திருவிதாங்கூரில் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.
சுசீந்திரம் என்கிற ஊரின் அருகிலிலுள்ள எழில் நிறைந்த தேரூர் என்னும் சிற்றூர் இவரது சொந்த ஊரானாலும், நாகர்கோவில் நகரை அடுத்த புத்தேரி’ என்கிற ஊரில்தான் கடைசி வரை வாழ்ந்து 1954இல் நம்மை விட்டுப் பிரிந்தார்.
இவராகத் திரைப்படத் துறையில் பக்கம் செல்லவில்லை. இவரது பல பாடல்களைத் திரை உலகம் அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்பாடல்கள் கூட திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. முதன்முதலில் என்.எஸ்.கே. பிக்சர்ஸ் தயாரித்த பைத்தியக்காரன் (1947) படத்தில் இவரது பாடல் ஒன்று பயன் படுத்தப்பட்டது. இதையடுத்து 1951இல் இதே நிறுவனத்தின் தயாரிப்பான ‘மணமகள்’ படத்தில் ஒரு பாடல். பின்பு ‘தாயுள்ளம்’ என்கிற படத்தில்,
கோயில் முழுதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏரி கண்டேன்
தேவாதி தேவனை நான்
எங்கெங்கும் தேடினும் கண்டிலனே
என்கிற ஒரு அற்புதமான பாடலை எம்.எல்.வசந்தகுமாரி பாட அப்பாடல் மிகவும் பிரபலமாயிற்று. இவைகள் தவிர 1952இல் ‘வேலைக்காரன்’. 1955இல் ‘கள்வனின் காதலி’, 1956இல் ‘கண்ணின் மணிகள்’, ‘நன் நம்பிக்கை’ ஆகிய படங்களிலும் இவரது பாடல் இடம் பெற்றன.
‘கள்வனின் காதலி’ படத்தில் இவரது,
‘வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு’
என்ற பாடல் பி. பானுமதி, கண்டசாலா குரலில் மிகவும் வெற்றியடைந்தது.
1954இல் இவர் காலமானபோது, நாஞ்சில் நாட்டை உள்ளடக்கிய குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்குப் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு கவிமணி பெருமைப்படுத்தப்பட்டார்.
அஞ்சலி செய்யும் வாய்ப்பு, சிறுவனாக இருந்த இக்கட்டுரையாளருக்குக் கிடைத்தது என்றொரு பெருமிதமுண்டு.
- கிருஷ்ணன் வெங்கடாசலம்
குற்றம் கடிதல் விமர்சனம்
62ஆவது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் வகுப்பு மாணவண் ஒருவனை ஆசிரியை அறைந்து விடுகிறார். அம்மாணவனுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது. பின் என்னானது என்று பரபரப்பாகச் செல்கிறது படத்தின் கதை.
வழக்கமான சினிமாவிலிருந்து வழுவி ஒரு சம்பவத்தை பிரதானமாகக் கொண்டு படமெடுத்துள்ளார் இயக்குநர் பிரம்மா. கதாபாத்திரங்களின் அறிமுகம் முடிந்து, ஓர் ‘அறை’யில் தொடங்கும் படம் அசுர வேகமெடுக்கிறது. அங்குத் தொடங்கும் பதற்றத்தை, கடைசி நொடி வரை அவரது திரைக்கதை தக்க வைக்கிறது.
பாலியல் கல்வியின் அவசியம் குறித்த முஸ்தீபுகளுடன் படம் தொடங்குகிறது. ஆனால் படம் சூடு பிடிக்கத் தொடங்கியதும், ‘ஆசிரியர் மாணவர்களை அடிக்கலாமா கூடாதா?’ என்று விவாதத்துக்குள் நுழைகிறது. விறுவிறுப்பை கடைசி வரை தக்க வைக்க இந்த விவாதம் உபயோகிக்கப்பட்டாலும், “பாம்புக்கும் நோகக் கூடாது, தடிக்கும் வலிக்கக் கூடாது” என்பது போல் படத்தை அழகாக முடித்துவிட்டார்.
‘எது குற்றம்?’, ‘யார் குற்றம் செய்தனர்?’, ‘எப்படி பகை தவிர்க்கப்பட்டது?’ என்ற எந்தக் கேள்விக்கும் படத்தில் பதிலில்லை. ஏனெனில், “குழந்தைகளைக் கண்டிக்காமல் வளர்க்க இயலாது” என்று விவாதத்துக்கு உறுதியான முற்றுப்புள்ளி வைக்கிறார் கல்வித்துறை அதிகாரியாக வரும் பெண்மணி. படத்தின் பிரதான பாத்திரம் மெர்லினாகக் கலக்கியிருக்கும் ராதிகா பிரசித்தாவோ, தானேற்ற பாத்திரத்தின் மதம் சார்ந்த நம்பிக்கைகள் உருவாக்கிய குற்றவுணர்ச்சிகளின் காரணமாக, “நான் அடித்தது தப்புதான்” என ‘வாக்குமூலம்’ தருவதோடு மட்டுமல்லாமல், “மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளாக நினைக்கவேண்டும்” என்றும் சொல்கிறார். சரி தான், ஆனால் எந்த வீட்டில் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் அடி வாங்காமல் வளர்கின்றனர்?
‘சிங் எ சாங்’ என்ற பாடலில் வரும் ஆங்கில ஆசிரியையான ஐஸ்வர்யா நிஜத்திலும் ஓர் ஆசிரியையே.! கதை விவாதக் குழுவில் அவரும் ஓர் அங்கம் என்பதோடு, இயக்குநர் பிரம்மாவின் மனைவியுமாவார். அதனால்தான் என்னவோ, மேனேஜ்மென்ட் பார்வையிலிருந்தும் இந்த விஷயத்தை அணுகும் விதத்தையும் பிரம்மாவால் காட்சிப்படுத்த முடிந்துள்ளது போலும். இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம், அனைவருமே நல்லவர்கள், மீடியாக்களைத் தவிர்த்து. ‘செய்திகளை முந்தித் தரணும்’ என்ற அவர்களது எல்லை மீறிய அவசரத்தையும், ‘விவாதத்தில் அசை போட என்ன தலைப்பு கிடைக்கும்?’ என்ற செய்தி சேனல்களின் தேடலையும் வேண்டிய மட்டுக்குக் கலாய்த்துள்ளனர் (தேசிய விருது வாங்கிய காக்கா முட்டை படமும் இந்த வேலையைச் சிறப்பாகச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது).
சிறுவனின் மாமாவாக நடிக்கும் பாவெல் நவகீதன் திரையில் தோன்றும் போதெல்லாம் நடுக்கம் ஏற்படுகிறது. முதலில் ‘அறை’, பின்தான் பேச்சே! சிறுவனின் அம்மாவாக நடித்திருக்கும் சத்யாவும் அசத்தியுள்ளார். கச்சிதமான கதாபாத்திரத் தேர்வுகளிலேயே பிரம்மா தனது வெற்றியை உறுதி செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது. பள்ளி முதல்வரின் மனைவியாக தன் இழப்பை வெகு இயல்பாக எடுத்துச் சொல்லி கனக்க வைக்கும் துர்கா, பிறப்புறுப்புகளைப் பற்றி பாடமெடுத்து மாணவர்களிடம் கை தட்டல் வாங்கும் சயன்ஸ் டீச்சராக வரும் நிகிலா கேசவன் என அனைவருமே சிறப்பாகப் பங்காற்றியுள்ளனர். பள்ளி முதல்வராக நடித்திருக்கும் குலோத்துங்கன், மெர்லினின் கணவர் மணிகண்டனாக நடித்த சாய் ராஜ்குமார், மணிகண்டனின் ‘சிங்’ நண்பர், காவல்துறை பெண் அதிகாரி என ஒருவர் பாக்கியில்லாமல் படத்துக்கு நியாயம் செய்துள்ளனர். மணிகண்டனின் அற்புதமான ஒளிப்பதிவும், ஷங்கர் ரங்கராஜனின் இசையும் அற்புதமாக உள்ளது.
செழியனாக நடித்திருக்கும் மாஸ்டர் அஜய்யையும், அவனது சேட்டையையும் அனைவருக்கும் பிடிக்கும். வகுப்பில் படிக்கும் சக மாணவிக்கு முத்தம் தரும் செழியனின் செய்கை மிக இயல்பானதெனச் சொல்லும் இயக்குநர்; அதே ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவியின் ‘போட்டுக் கொடுக்கும் குணம்’ மட்டும் இயல்பானதன்று என நாசூக்காய் இனச்சாயம் பூசி கைதட்டலை அள்ளுகின்றார். படம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும், சுபமாய் முடிந்து நிறைவாய்த் தருகிறது. ஆயிரம் முறைக்கு மேல் வீதி நாடகங்களைப் போட்டிருக்கும் இயக்குநர் பிரம்மாவின் திரைப்பிரவேசம் தொடர் வெற்றிகளால் ஆனதாய் அமையட்டும்.
ஜிப்பா ஜிமிக்கி விமர்சனம்
ஜிப்பா என்பது நாயகனுக்கான குறியீடு, ஜிமிக்கி என்பது நாயகிக்கான குறியீடு. ஜிப்பாக்கும் ஜிமிக்கிக்குமான ஊடல்தான் திரைப்படத்தின் கதை.
சென்னை டூ கூர்க், கூர்க் டூ சென்னை என படத்தின் பெரும்பகுதி பயணத்திலேயே கழிகிறது. நாயகனும் நாயகியும் வழியில் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் சுவாரசியமானவர்கள். முக்கியமாக கன்னட விவசாயியாக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மனதைக் கனக்க வைக்கிறார்.
படத்தில் நெகிழ்ச்சிக்குரிய காட்சிகள் ஏராளமாக உண்டு. ஆடுகளம் நரேனும், விஜய் டி.வி. ‘தாயுமானவன்’ புகழ் செளந்தரராஜனும் பேசும் காட்சிகள், இளவரசு தன் மனைவியைப் பற்றிச் சொல்லும் ஃப்ளாஷ்-பேக் காட்சிகள், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் அவர் மனைவியும் வரும் காட்சிகளை ஆகியவை உதாரணமாகச் சொல்லலாம்.
படத்தில் வில்லன் இருந்தே ஆக வேண்டுமென்ற திரை இலக்கணத்தை மீறக் கூடாதென திணித்துள்ளனர் குபீர் வில்லனை. அதன் பிறகு வரும் லோ பட்ஜெட் மெடிக்கல் மிராக்கிள் காட்சிகள் சிரிப்பை வர வைக்கின்றன. படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் சரவண நடராஜனே! மிகக் குறைந்த கலியமைப்பையும், கச்சிதமான லைட்டைங்கையும் கொண்டு ஒவ்வொரு ஃப்ரேமையும் பிரமாதப்படுத்தியுள்ளார்.
அறிமுக நாயகனாக சிக்ஸ் பேக் க்ரிஷிக். கொஞ்சமாக நடித்திருக்கலாம் என்ற எண்ணத்தை முதல் ஃப்ரேமிலிருந்து க்டைசி ஃப்ரேம் வரை நீங்காமல் பார்த்துக் கொள்கிறார். அவருக்கும் சேர்த்து ஈடு செய்கிறார் நாயகி குஷ்பு பிரசாத். இவர்களுக்குள் உண்டான ஊடலையும் காதலையும் இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சுவாரசியப்படுத்தியிருக்கலாம்.
கிராமத்தில் நின்று கொண்டு ‘கால் டேக்ஸி’ கிடைக்கவில்லை என நாயகி புலம்பும்போது, எதார்த்தத்தை எடுத்துச் சொல்லும் முதியவர் ரசிக்க வைக்கிறார். ஆனால் அத்தகைய காட்சிகள் இயல்பாக கதையோடு ஒட்டாமல், ஆங்காங்கே வருவது திரைக்கதையின் குறையாக உள்ளது.